அஸ்ஸலாமு அலைக்கும்

Saturday, 26 November 2011

மனிதனின் அந்தஸ்து......


மனிதனின் அந்தஸ்து
   அல்லாஹு தஆலா மனிதனைப் பற்றி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக அமைக்கப்போகிறன்" என்று அறிவித்துள்ளான்.(2;30) அல்லாஹ்வின் இப்பிரதிநிதித்துவ அந்தஸ்து வேறு எந்தப் படைப்புக்கும் கிட்டவில்லை; மலக்குகளுக்கோ, ஜீன் வர்க்கத்திற்கோ, வானம் பூமிக்கோ, கிட்டவில்லை, அவனது படைப்புகளில் மனித இனத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.  இதனால் தெரிவது என்ன?
   அல்லாஹு தஆலா மனிதனுக்கு இவ்விதமான பக்குவத்தையும், சக்தியையும் வழங்கியிருக்கிறான். அதன் காரணமாக எல்லாப் படைப்புக்களின் மத்தியிலும் மனிதனே அல்லாஹு தஆலாவின் பிரதிநித்துவப் பணியை நிறைவேற்றி வருகின்றான். அதாவது மனிதர்களே மற்றெல்லாப் படைப்புகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள், அவர்களின் சக்தி எல்லாரையும் விட மிகைத்து இருக்கிறது. சொல்லப் போனால் எல்லாப்படைப்புக்களும் மனிதர்களின் பணியாளார்களாகவே இருக்கின்றன.
   வெளித் தோற்றத்தில் காற்று, தண்ணீர், நெருப்பு, மண் ஆகியவைகளில் மனிதனின்  செயல் மூலம் பல விளைவுகள் ஏற்படுகின்றன,எனினும் இதையும் விட உயர்வாக உள்ளமனித அந்தரங்கத்தைக் கவனிப்பது தான் அவசியமாகும், அதன் மூலம் தான் அசல் பிரதிநிதித்துவமான கிலாபத்தே பாத்தினி (அந்தரங்க பிரதிநிதித்துவத்தை) விளங்க முடியும். எனவே தான் "உங்களில் அல்லாஹ்வின் நற்குணங்களை உருவாக்கி கொள்ளுங்கள்" என்று அறிவிக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து அல்லாஹு தஆலா, தன்னுடைய நற்குணங்களை ஏற்றுக் கொள்ளும் பண்பை மனிதனில் அமைத்து வைத்துள்ளான், என்பதும் மனிதன் முயன்றால் தன்னுள் அல்லாஹ்வின் நற்குணங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தெரிய வருகின்றன.
  மன்னிக்கும் மனப்பாங்கு,விட்டுக்கொடுக்கும் தன்மை, இரக்கம், கருணை, தானதர்மம், நாட்டம், கல்வி, சக்தி போன்ற பண்புகளால் அல்லாஹு தஆலா மனிதனை அமைத்துள்ளான், நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா மனிதர்களுக்கும் தலைவராய் இருப்பதால் எல்லோரையும் விட அதிகமான நற்குணங்கள் அமையப்பெற்றவர்களாக அன்னார் இருந்தார்கள். நாயகம் (ஸல்) அவர்களை பற்றி, "நிச்சயமாக, மகத்தான நற்குணங்களுடையவராகவே நீர் இருக்கின்றீர்" என்று அல்லாஹ் கூறுகின்றான். 
  அண்ணல் (ஸல்) அவர்கள் பலகீனர்களுக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள், தாம் பசியோடு இருந்த நிலையில், பசியுடன் வந்த மற்றவர்களுக்கு உணவளித்தார்கள், தமக்கு துன்பம் இழைத்தவர்களை மன்னித்தார்கள்  ஏழைகளை அரவணைத்தார்கள் சுருங்கக் கூறீன் மக்களின் மீது நீதியான முறையில் ஆட்சியும் செய்தார்கள். அத்துடன் சுரியன்,சந்திரன், வானம் பூமி, ஆகியவை மீது அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டினார்கள், நபி (ஸல்) அவர்களின் (முஃஜிஸா) அற்புதம் வெளியாகாத வஸ்துக்களே இல்லை எனலாம், இறுதியில் வானத்தின் எல்லையைத் தாண்டி அர்ஷையும் சென்றடைந்தார்கள், இத்தகைய பண்புக்களாலும் திறமைகளாலும்-- அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டதற்கேற்ப- எந்த சந்தேகமும் இல்லாமல் அல்லாஹ்வின் பிரதிநிதி மனிதன் தான் என்பது ஊர்ஜிதமாகிறது.
   அல்லாஹ்வை நம்பி உண்மையாக ஈமான் கொண்ட மனிதன் உண்மையிலேயே அல்லாஹ்வுடைய பிரதிநிதியும் சுவர்க்கத்திற்கு அருகதையுடையவனும் ஆவான், அல்லாஹ்வை நிராகரிக்கும் மனிதன் நரகவாசியாகி விடுகின்றான்.

நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி  

2 comments:

  1. பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று கூறினார். மற்றொருவர், ‘எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது” என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    புஹாரி : 3472 அபூஹுரைரா (ரலி).

    ReplyDelete
  2. செயலுக்கேற்ப கூலித் தரப்படும்:

    * (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (4:77)

    * அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (8:60)

    * அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:272)

    * (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:49)

    * நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (23:62)

    * ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (46:19)

    * எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (20:112)
    * எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். (6:160)

    * தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (19:60)

    * நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

    * (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (17:71)

    * ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (10:47)

    * பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (36:69)

    * அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான். (40:31)

    ReplyDelete